Monday, 13 October 2025
நெதர்லாந்து
மக்கள் தொகையைவிட சைக்கிள்கள் அதிகம் இருக்கும் நாடு .
ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதியில் பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளை ஒட்டி அமைந்துள்ள நாடு நெதர்லாந்து. இந்த நாட்டு மக்களின் பிரதான மொழி டச்சு. ஆம்ஸ்டர்டாம், ரோட்டர்டாம், தி ஹேக் (இதனை டச்சு மொழியில் டென் ஹாக் என்கிறார்கள்) ஆகியவை இந்த நாட்டின் முக்கியமான நகரங்கள். நாட்டின் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம். இது ஒரு பெரிய துறைமுக நகரம். ரோட்டர்டாம் ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம். நாட்டின் பாராளுமன்றம் இருப்பது தி ஹேக் நகரத்தில். ஆம்ஸ்டர்டாம் நகரத்துக்கு வயது 750. இந்த ஆண்டு அக்டோபரில் இதனைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறது ஆம்ஸ்டர்டாம் நகரம்.பல நூற்றாண்டுக் கால வரலாறு கொண்ட இந்த நகரத்துக்கு ஆம்ஸ்டர்டாம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? இந்த நகரத்தின் வழியாக ஆறு ஒன்று ஓடுகிறது. அதன் பெயர் ஆம்ஸ்டெல். அந்த ஆற்றின் மீது 1270-ல் அணையைக் கட்டினார்கள். அதாவது, ஆம்ஸ்டெல் ஆற்றின் மீது கட்டப்பட்ட டேம். அதுதான் ஆம்ஸ்டர்டாம். நகரின் டூரிஸ்ட் கைடுகள் எல்லோரும் இந்தத் தகவல் சுற்றுலாப் பயணிகளுக்குச் சொல்கிறார்கள். ஆனாலும், அதற்கு முன்பே ஆம்ஸ்டெல் ஆற்றை ஒட்டி மக்கள் வசித்த பகுதி இதே பெயரில்தான் அழைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஆக, பதின்மூன்றாம் நூற்றாண்டில் மீனவ கிராமமாக இருந்த இடம்தான் இன்று நாம் காணும் ஆம்ஸ்டர்டாம் என்ற சர்வதேசப் பெருநகரமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
இங்கே, 170 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். ஆண்டுக்கு 1.14 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். இவர்களில் 45 லட்சம் பேர் மட்டுமே உள்நாட்டு டச்சு டூரிஸ்ட்டுகள். மீதி 95 லட்சம் பேர் அயல்நாட்டுச் சுற்றுலாப்பயணிகள். இது ஆம்ஸ்டர்டாமின் மக்கள் தொகையைவிட பல மடங்கு அதிகம்.
ஆம்ஸ்டர்டாமில் வீடுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. அந்தக் காலத்துத் திருவல்லிக்கேணி வீடுகள் போல வீடுகளின் சுவர்கள் ஒன்றோடொன்று ஒட்டியே இருக்கும். அதைவிட சுவாரசியமான விஷயம், வீடுகளின் நுழைவுப் பகுதி மிகவும் குறுகலாகவும், உள்ளே மிக
நீ...ள...மாகவும் போய்க்கொண்டே இருக்கும். அதற்கும் ஒரு பின்னணி உண்டு. அந்தக் காலத்தில் ஒரு வீட்டின் முன்பகுதி எவ்வளவு அகலம் என்பதை வைத்துதான் வீடுகளுக்கு வரி வசூல் செய்யப்பட்டதாம். எனவே, முகப்பு குறுகியதாகவும், உட்புறம் நீண்டும் இருக்கும்படி வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், எல்லா வீடுகளும் மூன்று, நான்கு மாடிகள் வரை கட்டப்பட்டுள்ளன. உபரியாக பேஸ்மென்ட்டும் உண்டு. வீடுகள் அகலக் குறைவு என்பதால், மாடிப்படிகளுக்கு இடப்பற்றாக்குறை. எனவே, பெரும்பாலும் ஸ்பைரல் படிகள்தான்.
ஆம்ஸ்டர்டாமை `மியூசியங்களின் சொர்க்கம்' என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தெருவுக்குத் தெரு மியூசியங்கள். சின்ன வயசில் பத்திரிகைகளில் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்று படித்திருக்கிறோம் இல்லையா? அந்த ரிப்ளியின் `நம்பினால் நம்புங்கள்' சமாச்சாரங்களைக் கொண்ட ஒரு மியூசியமும் இங்கு உள்ளது. புகழ்பெற்ற மேடம் டூசாத் மெழுகுச் சிலை மியூசியமும் உள்ளது. வான் கா, ராம்பிராண்டு போன்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுக்கென்றே பிரமாண்டமான மியூசியங்களும் இருக்கின்றன. அங்கே இந்த ஓவியர்களின் பல ஒரிஜினல் ஓவியங்கள் பார்வைக்கு உள்ளன. இவற்றைத் தவிர, சயின்ஸ் மியூசியம், டங்கன் என்று பண்டைய கொடூரங்கள் உள்ளிட்ட பயங்கரங்கள் மூலம் ஆளை மிரட்டும் மியூசியம், படகு வீடு மியூசியம், யூத வரலாற்று மியூசியம், பழைமையான ரைக்ஸ் மியூசியம், பைபிள் மியூசியம், கம்ப்யூட்டர் மியூசியம், டயமண்ட் மியூசியம், திரைப்பட மியூசியம், புகைப்பட மியூசியம், கால்வாய்கள் மியூசியம், காஸ்ட்யூம் மியூசியம், மரண மியூசியம், துலீப் மலர் மியூசியம், ஆன் ஃப்ரங்க் இல்லம் என்று ஏகப்பட்ட மியூசியங்கள். அவ்வளவு ஏன்? போர்னோகிராபி, எரோடிகா போன்ற சமாச்சாரங்கள் அடங்கிய ஒரு செக்ஸ் மியூசியம், ஆம்ஸ்டர்டாமில் பிரசித்தி பெற்ற பாலியல் தொழில் குறித்த மியூசியம்கூட இங்கு உண்டு.
இன்னொரு முக்கியமான விஷயம். ஆம்ஸ்டர்டாமில் மைல்டு ரக போதை வஸ்துகளுக்கு அனுமதி உண்டு. காபி ஷாப்களிலேயே அவற்றை எளிதாக வாங்கலாம். அதேபோல, சிவப்பு விளக்குப் பகுதியும் உண்டு. அங்கே பகலிலும், அதைவிட ஜரூராக இரவிலும் சட்டபூர்வமாக பாலியல் தொழில் நடக்கிறது. பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளையும் நகர நிர்வாகம் வகுத்திருக்கிறது.
நடந்தே நகரத்தைச் சுற்றிக் காட்டும் வாக்கிங் டூரின்போது டூர் கைடு என்னிடம் ஒரு தகவலைச் சொன்னார். ``ஆம்ஸ்டர்டாம் நகரின் நெரிசல் மிகுந்த மூன்று முக்கிய ஏரியாக்களில் இப்போது சிவப்பு விளக்குப் பகுதிகள் இயங்கிவருகின்றன. இவற்றை நகருக்கு வெளியில் ஒரே இடத்தில் இடம் மாற்றப் போவதாக தற்போதைய நகர மேயர் சொல்லியிருக்கிறார். அதற்கு பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.”
ஆம்ஸ்டர்டாம் நகரத்து மத்திய ரயில் நிலையத்தில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் உள்ளது டாம் ஸ்கொயர் என்ற இடம். நகரின் மிக முக்கியமான இடம் இதுதான். டாம் ஸ்கொயரை ஒட்டி ஒரு பெரிய கட்டடம், அதனை ராயல் பேலஸ் என்று அழைக்கிறார்கள். ஆனால், அங்கே ராஜ குடும்பத்தினர் யாரும் இப்போது வசிக்கவில்லை. அரசாங்கத்தின் சில முக்கியக் கூட்டங்கள் அங்கே நடக்குமாம். நெப்போலியன் ஹாலந்தைக் கைப்பற்றியதும், இந்தப் பகுதியை ஆள்வதற்குத் தன் தம்பி லூயிஸ் போனபார்ட்டை அனுப்பி வைத்தாராம். அந்த லூயிஸ் இந்த அரண்மனையில் தங்கியதால், அதற்கு ராயல் பேலஸ் என்று பெயர் வந்தது.
இந்த டாம் ஸ்கொயரிலேயே பார்த்து ரசிக்க நிறைய உண்டு. சில இசைக்கலைஞர்கள் மெய் மறந்து ஏதாவது ஒரு இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருப்பார்கள். எதிரே ஒரு தொப்பி வைக்கப்பட்டிருக்கும். சிறிது நேரம் இசையைக் கேட்டு ரசித்துவிட்டு, தொப்பியில் கொஞ்சம் சில்லறைகள் போட்டுவிட்டுப் போகிறார்கள் பார்வையாளர்கள். பக்கத்திலேயே ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாகசம் பண்ணுவார் இன்னொருவர். அருகிலேயே குழந்தைகள் தரையில் உட்கார்ந்துகொண்டு பொம்மலாட்டம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். குழந்தைகள் குதூகலமாக பொம்மலாட்டத்தை ரசிக்க, அந்த நிகழ்ச்சி முடியும் வரை பெற்றோர்கள் பொறுமையோடு அங்கே காத்திருப்பார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன், குழந்தைகளுக்கு சோகம்; பெற்றோர்கள் முகத்தில் மலர்ச்சி!
இதைவிட சுவாரசியமான ஒரு விஷயம், வேஷம் கட்டிய மனிதர்கள். காலை முதல் மாலை வரை ஏதாவது ஒரு வேஷம் போட்டுக் கொண்டு, ஒரே இடத்தில் அசையாமல் நின்றுகொண்டிருப்பார்கள். இவர்களில்தான் எத்தனை ரகம்! டிராகுலா போல, எலும்புக்கூடு போல, மகாராணி போல, சிக்கனமாக உள்ளாடைகள் அணிந்துகொண்டு, உடம்பு முழுக்க பல வண்ணப் பெயின்ட்கள் பூசிக்கொண்டு நிற்பவர்களையும்கூடக் காணலாம். சுற்றுலாப்பயணிகள் அவர்களோடு சேர்ந்து நின்றுகொண்டு போட்டோ எடுத்துக் கொள்வார்கள். சும்மா இல்லை, அவர்களுக்குக் காசு கொடுக்க வேண்டும்.
அங்கே எந்த நேரமும் ஜனங்களையும், புறாக்களையும் ஒருசேரக் காணலாம். புறாக்கூட்டத்துக்கு மத்தியில் கைகள் மேல், தோளில், தலையில் புறாக்கள் உட்கார்ந்திருக்க போட்டோ எடுத்துக்கொள்வது இங்கே மிகப் பிரபலம். இரண்டு பேர் கையில் ஒரு பையுடன் நிற்கிறார்கள். பையில் அரிசி. ஒரு கை அரிசியை உங்கள் கையில் கொடுத்ததும், அதைப் புறாக்களுக்கு நீங்கள் போடும்போது அவை உங்களை நெருங்கி, உங்கள் கையில், தலையில், தோளில் ஜம்மென்று உட்கார்ந்துகொள்ளும். அப்படியே கிளிக்கிக் கொள்ள வேண்டியதுதான். அரிசிக்காரருக்கு இஷ்டம் போல டிப்ஸ் கொடுத்துவிட்டு நகரலாம். அரிசியை உச்சந்தலையில் தூவிக்கொண்டு புறாக்களைத் தலைக்கே வரவழைத்து போட்டோ எடுத்துக் கொள்பவர்களும் உண்டு.
டாம்ஸ்கொயர் ஒரு பொழுதுபோக்குக் களம் மட்டுமல்ல, ஒரு போராட்டக் களமும் கூட! சனி ஞாயிறு என்றால், சிலர் குழுக்களாக வந்து பேனர்கள் வைத்து, தங்கள் பிரச்னைகள் பற்றி விளக்குவார்கள். துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பார்கள். நான் ஒரு சீனக் குழுவினரை சந்தித்தேன். சீனாவில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்வது கனஜோராக நடந்து கொண்டிருக்கிறதாம். சீனர்கள் குழு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் டாம்ஸ்கொயரில் கூடி, இது பற்றிய துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து, மனித உறுப்பு விற்பனைக்கு எதிராகக் கையெழுத்து பெறுகிறார்கள். இன்னொரு பக்கம், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் தங்கள் பிரச்னைக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். அங்கே பார்த்தால் கடுமையான அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்புப் பிரசார பேனர்கள்; அதற்கு சற்றுத் தள்ளி சில யூதர்கள் `தீவிரவாதத்தை முறியடிப்போம்' என்று பாலஸ்தீன தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பிரசாரங்களும் டாம்ஸ்கொயரில் ஒரே இடத்தில் நடக்கின்றன.
ஒரு குழுவினரிடம், “இங்கே யாரும் தம் இஷ்டப்படி போராட்டம், பிரசாரம் செய்யலாமா?'' என்று கேட்டேன். “நாங்கள் முறைப்படி அரசாங்க அனுமதி பெற்றிருக்கிறோம்'' என்றார் அவர். வாழ்க ஜனநாயகம்! வாழ்க பேச்சுரிமை!
Subscribe to:
Post Comments (Atom)
-
ஏழாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் தெ...
-
மக்கள் தொகையைவிட சைக்கிள்கள் அதிகம் இருக்கும் நாடு . ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதியில் பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளை ஒட்டி அமைந்துள்ள நாடு...
-
🕉️ திருக்கோணமலையின் வரலாறும் இராவணன் வெட்டின் அதிசயமும் 📍இடம் மற்றும் இயற்கை அமைப்பு திருக்கோணமலை இலங்கையின் கிழக்கு கடற்கரையில் அமைந...
நெதர்லாந்து நாட்டின் சைக்கிள்கள், வீடுகள் பற்றிய சுவாசியமான தகவல்கள். . .
ReplyDelete